தமிழ்நாடு மின்வாரியத்தில் 2021 ஆம் ஆண்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தன. அப்போது மின் வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் தகுதி தேர்வு வாயிலாக மாவட்டம் தோறும் தேர்ந்தெடுத்து, மொத்தம் 15 ஆயிரம் தொழிலாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் 9 ஆயிரத்து 613 நபர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இப்படி தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களை அந்த அந்த மாவட்டத்தில் நியமனம் செய்யாமல் 300 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு பணியில் அமர்த்தப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த கேங்மேன் தொழிலாளர்கள் மின்கம்பம் ஊன்றுவதற்கு பள்ளம் தோண்டுதல், புதிதாக மின் பாதை கொண்டு போவதற்கு கம்பம் ஊன்றுவதற்கு ஆகிய பணிகளுக்காக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் கம்பியாளர், மின் பாதை ஆய்வாளர், மின் கணக்கீட்டாளர், அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் என அதிகப்படியான காலிப் பணியிடங்கள் உள்ளதால், கேங்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களை மேற்கண்ட பொறுப்பில் உள்ளவர்கள் உடைய பணிகள் அனைத்தையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். கட்டாயப்படுத்துவதோடு இல்லாமல், செய்யவில்லை என்றால் மிரட்டுகிறார்கள். ஆகவே கேங்மேன் தொழிலாளர்கள் குடும்பத்தை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் பணி புரிவதாலும், அதிகமான பணி சுமையாலும், மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலோடு பணி புரிவதால், 70-க்கும் மேற்பட்ட கேங்மேன் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே இறந்து விட்டார்கள். மின் வாரியத்தில் கள உதவியாளர் என்று இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பதற்காகவே கேங்மேன் என்ற ஒரு புதிய பொறுப்பை உருவாக்கி, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் மின்வாரியத்தில் உள்ள அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய அளவுக்கு பணி சுமை கொடுக்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கேங்மேன் என்ற தொழிலாளர்களை கள உதவியாளராக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, மேலும் கேங்மேன் தொழிலாளர்களை அவர் அவர் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அரசாணையும் உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
