தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) நடவடிக்கையின் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் மற்றும் சில வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நீக்கங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, உண்மையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது பொதுமக்களின் முக்கியமான பொறுப்பாகும். ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமை என்பது அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை ஆகும். உண்மையான காரணங்கள் இல்லாமல், தவறுதலாகவோ அல்லது அரசியல் காரணங்களாலோ வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், அதனை எதிர்த்து கேள்வி கேட்கவும், திருத்தம் கோரவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு உரிமை உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனவா, அல்லது நீக்கப்பட்டிருந்தால் அது சட்டப்பூர்வமான காரணங்களின் அடிப்படையில் தானா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் அமைத்துள்ள முகாம்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை செயல்பட இருக்கிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரில் சென்று, தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள தேவையான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் குடும்பத்தினரும் தங்களின் வாக்குரிமையை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வதும், தவறுகளை திருத்திக் கொள்வதும் நமது ஓட்டுரிமை நமது ஜனநாயக கடமை.




