தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அன்புடனும், ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இத்திருநாளில், தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, வளமும், நலமும் பெருகிட மனமார வாழ்த்துகிறேன்.
இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் என மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் நீங்கி, அனைவருக்கும் சமமான வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் தீபாவளித் திருநாளில் நமது எதிர்பார்ப்பாகும்.
நமது கேப்டன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லையென்றாலும், அவரது மனிதநேயம், எளிமை, கொடைத்தன்மை, மக்கள் சேவை மற்றும் அரசியல் இலட்சியங்கள் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் என்றும் அணையாத தீபமாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தீபாவளி ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், ஒவ்வொரு குடும்பத்திலும் செழிப்பையும், தமிழகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்தட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லவர்கள் இலட்சியம்! வெல்வது நிச்சயம்!!





