தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் பெரும்பாலானவை அரசு புறம்போக்கு நிலங்களாக உள்ள நிலையில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தியாளர்கள் அரசு அனுமதியுடன் குத்தகைக்கு எடுத்து உப்பளங்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை உருவாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உப்பு உற்பத்தி என்பது தூத்துக்குடி பகுதியின் பாரம்பரியமான தொழிலாக மட்டுமின்றி, ஒரு லட்சத்திற்கும் மேலாக குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. உப்பளங்கள் அழிக்கப்பட்டால், உப்பு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமையாகும். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் ஒரு பாரம்பரியத் தொழிலை அழிக்கக் கூடாது. உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செவிசாய்த்து, உப்பளத் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்று பழமொழி உண்டு. எனவே உப்பு உற்பத்தியாளரை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.




