சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை என்று வானிலை மையம் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் அதீதக் கனமழை ரெட் அலர்ட் என்கின்ற செய்தியைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இந்த மழைக்காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டும். சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை உடனடியாகப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து மாத்திரை, அத்தியாவசியப் பொருட்கள், என அனைத்தும் தாமதமில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக மலைப் பகுதிகள், தாழ்வான பகுதிகள், குடிசைப் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், இருக்கின்ற பகுதிகளில் அதிகக் கவனம் செலுத்தி இந்த மழை வெள்ளம் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு நான்கு ஆண்டுக் காலமும் மழை வெள்ளம் ஏற்படும் போது 95 சதவீதம் வேலைகள் நிறைவு பெற்று விட்டதாகச் சொல்லும் அரசு இன்றைக்கு வரைக்கும் எந்த வித வேலைகளையும் முடிந்ததாகத் தெரியவில்லை. மழைநீர் வடிகால் திட்டமோ, மெட்ரோ திட்டமோ இன்று வரை நூறு சதவீதம் முடியவில்லை. எனவே சாலையில் செல்பவர்கள், இரண்டு சக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே மூன்று உயிர்கள் மழை தேங்கி இருக்கும் குழியில் விழுந்து இறந்ததாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றது. மின்சாரத் துறையையும் இந்த அரசு உடனடியாகத் துரிதப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் மின் வெட்டு பாதிப்பு, மின் கம்பங்கள் சாய்வதும், உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுவதை உடனடியாகக் கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி, என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக் காலத்தில் மக்களைக் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழை நீரால் பாதிக்கப் பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) நீங்கள் தங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவியை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற நமது தலைவரின் கொள்கைப் படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்து உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

