கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து சுமார் 30 மீட்டர் அளவில் ஏற்கனவே குப்பை தரம் பிரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த பகுதியில் ஏறத்தாழ சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் ஒரு கிடங்கு அமைக்கின்ற பணிகள் கோவை மாநகராட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பீளமேடு குடியிருப்பு சங்கங்கள் மூலமாக கோரிக்கை மனுக்கள் பல்வேறு அதிகாரிகளுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. பீளமேடு பகுதியில் புதிதாக மேற்கண்ட குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டால் ஏறத்தாழ 50 ஆயிரம் மக்களின் சுகாதாரம் என்பது, தற்பொழுதும், காலப்போக்கிலும் தொடர்ந்து சீர்கெடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தற்போதைய தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படாமல் இருக்க, மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு அமைக்க வேண்டும். பீளமேடு பகுதியில் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, புதியதாக அமைய உள்ள குப்பை தரம் பிரிக்கும் கிடங்கினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
