“டிட்வா” புயல் வலுவிழந்திருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குண்டும் குழியுமான பல சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதியப்படுகின்றனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுவதால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தொடர்ச்சியான மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, அவர்கள் தேவையான உணவு, மருந்து, உடை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் வழங்க வேண்டும். எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள நமது கழக நிர்வாகிகள் நேரடியாக கள ஆய்விற்குச் சென்று, “நம்மால் முடிந்த உதவிகளை” மக்களுக்கு செய்து ஆறுதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சுரங்கப் பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தமிழக அரசையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


