கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர் பெல்ட் மற்றும் கம்பு கொண்டு கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்கிய சம்பவம் உலகையே ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், மனவேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலான இந்த வீடியோவில், 10-12 வயது சிறுவர்கள் அழுது கதறியபடி தாக்கப்படுவது மனிதாபிமானமுள்ள எவரையும் கலங்க வைக்கும். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம்; அவர்களை அன்போடு அரவணைத்து, பாதுகாப்பான சூழலில் வளர்க்க வேண்டிய காப்பகங்கள், இவ்வாறு கொடுமைகளின் கூடாரமாக மாறுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தக் காப்பகத்தில் 26 ஆதரவற்ற குழந்தைகள் தங்கி, அடிப்படை கல்வி மற்றும் பராமரிப்புக்காக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டியவர்கள், அவர்களை மிருகத்தனமாகத் தாக்குவது ஏற்புடையதல்ல. குழந்தைகளைத் தாக்கிய ஊழியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். இந்தக் காப்பகத்தின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்து, அங்கு தங்கியிருக்கும் குழந்தைகளை அரசு காப்பகங்கள் அல்லது பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து தனியார் காப்பகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளின் நலன் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சமூக நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும். 2017-இல் 438 காப்பகங்கள் அனுமதியின்றி மூடியது, இதற்கு முன்னுதாரணமாக உள்ளது. இப்போது மீதமுள்ள 494 காப்பகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மறுவாழ்வு மற்றும் கொடுமையால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். விழிப்புணர்வு மற்றும் புகார் மையத்தின் மூலம் காப்பகங்களில் நடைபெறும் தவறுகளைப் புகார் செய்ய பொதுமக்களுக்கு 24/7 இயங்கும் தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும். இந்நிகழ்வை பார்க்கும்போது ஆதரவற்ற குழந்தைகள், பெண் பிள்ளைகள், முதியவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு கடுமையான தண்டனைகளையும் விதிக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
