மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. படுகொலை செய்யப்படுவது என்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாக அமையும். ஏற்கனவே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதோடு, இப்போது இந்த இரு இளைஞர்களும் மதுவிற்பனையைத் தடை செய்யக்கோரி, தட்டிக் கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன், அவர்களுக்குக் மரண தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும் சட்டம், ஒழுங்கை உறுதிபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
