திருப்பூர் பொன்னம்மாள் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீதிகளில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் எதிர் வீடுகளில் இருந்தவர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு வெடிகுண்டு வெடித்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருட்கள் சேதமடைந்து தூக்கி எரியபட்டு, மோட்டார் சைக்கிள்கள் போன்றவை முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் மிக முக்கிய நகரமாக திருப்பூர் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் திருப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. எனவே உண்மையிலேயே நாட்டு வெடி குண்டு விபத்தா அல்லது தீவிரவாத செயலின் பின்னணியா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். காவல்துறை உடனடியாக ஆய்வு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசின் பாதுகாப்பு குளறுபடியால் இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்தும், நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் ஏற்பட்டது.
ஓரிரு நாளிலே திருப்பூரில் மீண்டும் இன்றைக்கு நாட்டு வெடிகுண்டு விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி என்கிற செய்தி தமிழக மக்களின் பாதுகாப்பை இந்த அரசு கேள்விக்குறியாக்கியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு மக்களின் மத்தியில் அச்சத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு தங்கள் கட்சியின் வளர்ச்சி, அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்களே தவிர, மக்கள் பாதுகாப்பு பற்றியும், மக்கள் நலனில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்பது “உள்ளங்கை நெல்லிக்கணியாக” அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளின் மூலம் தெரிகிறது. வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழக அரசு மக்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனி இதுபோன்ற நிகழ்வுகள் எங்கும் நடக்காத வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர் செய்து மக்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டை இந்த அரசு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.