விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும், ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம். அது மட்டுமில்லாமல் இந்தப் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. வெறும் நிவாரண தொகை அளிப்பது மட்டும், இதுபோன்ற பிரச்சனைக்குத் தீர்வு கிடையாது. பட்டாசு ஆலைகளின் உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து, அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்து, பட்டாசு ஆலைகளின் விபத்துகளை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழக அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
