சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition) முடித்துவிட்டு வீடு திரும்பிய பொழுது, பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் மின் கசிவு ஏற்பட்டு, தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். முறைகேடாக மின் கேபிள் பொருத்தி உயிர் இழப்பிற்கு காரணமான மின் வாரியத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், மேலும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக மின்சாரத்தை துண்டிக்க பலமுறை போன் செய்தும் இணைப்பு எடுக்காமல் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இப்பகுதியில் வீடுகளுக்கு மின் கேபிள்கள் வீட்டு வாசல்களிலும், மேல்புறத்திலும் முறையில்லாமல் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஆளும் அரசு சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி சிங்கப்பூருக்கு இணையான சென்னையாக ஆக்குவோம் என்றனர். ஆனால் இன்றைக்கு சிங்காரச் சென்னை, சீரழிந்த சென்னையாக குண்டும், குளியுமாக மழை நீர் தேங்கி, மின்சார வயர்கள் அறுந்து, உயிர்களை பலி வாங்கும் ஒரு மாநகராட்சியாக இருக்கிறது. எனவே இந்த நிலைகளை மாநகராட்சி மேயர் அவர்களும், ஆளும் கட்சியும் இணைந்து சீர்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான மாநகராட்சியாக உருவாக்கம் வேண்டும். உயிரிழந்த சிறுனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
