திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம், மானூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறு குழந்தைகளின் குடிநீரில் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள இந்த சம்பவம் சாதாரணமான ஒன்றாகக் கருதப்படக்கூடாது. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகவும், முழுமையாகவும் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் குடிநீர் தொட்டி உள்ளிட்ட அனைத்து குடிநீர் வசதிகளையும் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் உடல்நிலை தொடர்பாகவும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர் நிகழ்வாகவே இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




