தமிழக அரசியல் வரலாற்றில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு, மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பல நாட்களாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் சுரேஷ்குமார் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் குறித்து புகார் அளித்த மக்களுக்கு இன்று நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாநகராட்சி வரியை உயர்த்தி, அதன் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதாகக் கூறி, அந்தப் பணத்தில் ஊழல் செய்யும் இத்தகைய ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இதன்மூலமே தமிழ்நாட்டில் லஞ்சமும் ஊழலும் இல்லாத, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இலட்சியத்தின் படி நேர்மையான ஆட்சி அமைய முடியும். இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு, மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதி என்ற போர்வையில் ஒட்டுமொத்த நீதிமன்றங்களையும், ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் இத்தகைய தொடர் செயல்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற நாடகங்களை விடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதி மன்றம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், ஊழல் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்டு, மதுரை மாநகராட்சிக்கு மீண்டும் செலுத்தி, மதுரை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
