பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரி சென்னையில் தொடர்ந்து பத்து நாட்களாகப் போராடி வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் காலையில் கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும் தினந்தோறும் வாடிக்கையாக உள்ளது. இதை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியாக 181ல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்று ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. 50 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. தமிழக அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 15ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
