நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மென்பொறியாளரை ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார். உடல் நலமின்றி இருந்த கவின் தாத்தாவுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கவின் அழைத்து வந்துள்ளார். அதை அறிந்த காதலியின் சகோதரர் சுர்ஜித் அந்த மருத்துவமனைக்குச் சென்று, கவினை சுர்ஜித் அழைத்துப் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் ஆணவக் கொலையில் முடிந்துள்ளது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுர்ஜித் கொலை செய்தது உறுதியானதாக காவல்துறையினர் கூறுகின்றனர். தமிழகத்தில் கொலை சம்பவம் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. பெரியாரும், பாரதியாரும் வாழ்ந்த தமிழ்நாட்டில் சாதிக்காக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது வேதனைக்குறியது. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் தமிழக காவல்துறை இதில் தனிக்கவனம் செலுத்தி இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இளைஞர் கவினை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
