திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த 7 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், ஒரு சிறுவன் உள்பட மூவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதப்படும் வேளையில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய சூழல்களில் துரிதமாக செயல்பட்டு, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
