விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு நம் நாட்டில் உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத கெட்டுப்போன, துரித உணவுகள் அதிகமாகவே இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு விவசாயிகள் தோட்டத்தில் இயற்கையாக விளைவிக்கும் தர்பூசணி பழத்தில் சாயம் கலந்ததால் சாப்பிடக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு குழந்தையை வளர்ப்பது போலப் பார்த்துப் பார்த்து வளர்த்து, விதை போட்டதிலிருந்து அதை அறுவடை செய்யும் காலம் வரை கண் தூங்காமல், கடன் வாங்கி கஷ்டப்பட்டு பயிர்களை வளர்க்கின்றனர். கடைசியில் இதற்கு லாபம் கிடைக்கும் என்ற தருவாயில் இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல. உரலுக்கு ஒருபுறம் இடி, மத்தளத்திற்கு இரண்டு புறம் இடி என்பது போல் விவசாயிகளின் வாழ்க்கை எல்லா பக்கத்திலும் பாதகத்தை ஏற்படுத்தும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. விவசாயிகள் வாழ்க்கை நல்லா இருந்தால் தான் நாடும் நல்லா இருக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
