சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் இதுபோல் தென்காசி கடையநல்லூரில் தனியார் பேருந்துகள் அதிக வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தி 7 பேர் உயிரிழந்து ஒருவாரத்திற்குள் மீண்டும் பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதால் போக்குவரத்து துறையும், தமிழக அரசும் இதில் தனி கவனம் செலுத்தி எதனால் இந்த விபத்து நடந்தது? பேருந்தில் ஏதேனும் கோளாறா? ஓட்டுநர்கள் வேகமாக பேருந்துகளை இயக்குகின்றனரா என்பதை ஆராய்ந்து அதற்கான பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதிக வேகம் விபத்து என்று தெரிந்தும் பேருந்துகள் வேகமாக இயக்குவது கண்டிக்கத்தக்க செயல். இனிமேல் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி அவர்களைக் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.




