காவலர்களுக்கான பதவி உயர்வில் முன்னுக்குப் பின் முரணான அரசாணையை வெளியிட்டு காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த 12.06.2025 அன்று வெளியிட்ட புதிய அரசாணையின்படி காவலர்களுக்கான நிலை உயர்த்துதலில் தற்போது உள்ள 10+5+10 பணி ஆண்டுகள் என்பதை மாற்றி, 10+3+10 பணி ஆண்டுகள் என நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலராகவும், அதன்பின் அடுத்த 3 ஆண்டுகள் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்த பிறகு ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகள் ஏட்டாகப் பணிபுரிந்த பிறகு, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகவும் தரம் உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதை மாற்றி, 23 ஆண்டுகளாகக் (2ஆண்டுகள்) குறைத்துள்ளது.
மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்தின்கீழ் தலைமைக் காவலர்களாகவும், சிறப்பு சார் ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பொருந்தாது, அதாவது, 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்குப் பணிக்கால வரம்பு குறைப்பு பொருந்தாது என்பது அக்காலகட்டத்தில் பணியில் சேர்ந்த காவலர்களுக்கு தமிழக அரசு செய்கின்ற துரோகம் ஆகும். இது ஒரே துறையில் பணிபுரிபவர்களுக்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்துவது போல் உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த திட்டத்தின் கீழ் தலைமைக் காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்குவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும். திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி அரைகுறையாக நிறைவேற்றுவதும், அந்த அரைகுறை வாக்குறுதியில் பாகுபாடு காட்டுவதும் ஏற்புடையதல்ல. எனவே இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி மக்களின் நண்பன், மக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கு திமுக வாக்குறுதியில் தெரிவித்தபடி நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
