கடலூர் மாவட்டம், கொடுக்கன்பாளையம், பெத்தான்குப்பம், மலையடிகுப்பம், வானமாதேவி, கட்டாரசாவடி, ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் (2,000) மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சுமார் 170 ஏக்கரில் முந்திரி விவசாயம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள். மேலும் முந்திரி மரங்கள் மற்றும் பனை மரங்களை அழித்துவிட்டு, (காலணிகள்) தொழிற் பூங்கா [NON LEATHER FOOT WEAR PARK) அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்து, தனியார் தொழிற்சாலைக்கு தாரைவார்க்கும் நோக்கில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்களுடன் அகற்றி வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிப்பதுடன், அங்கு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த இடத்திற்கு தொழிற்சாலை வந்தால் இங்கிருந்து கடலூர் மாநகரத்திற்கு ஆதாரமாக இருக்கும் குடிநீர் மாசுபடும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் வீணாகி அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். எனவே தமிழக அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
