நாய்கள், மனிதர்களுக்கு உண்மையான தோழர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும், வீட்டின் பாதுகாவலர்களாகவும் விளங்குகின்றன. இந்து மரபில், பைரவர் வடிவமாக வழிபடப்படும் நாய்கள், விசுவாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் மக்கள் நாய்களை அன்பின் அடையாளமாகக் கருதி, குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வருகின்றனர். இந்தியாவில், நகர்ப்புறமோ, கிராமப்புறமோ, நாய்கள் மனிதர்களுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளன. நாய்கள் தினத்தில், நாய்களையும், அவற்றைப் பராமரிப்பவர்களையும் மனமார வாழ்த்துகிறோம். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாய்க்கடி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து தற்போது கவலைகள் எழுந்துள்ள நிலையில், நாய்க்கடி ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. மத்திய, மாநில அரசுகள் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் காப்பகங்கள் அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பையும், விலங்கு நலனையும் உறுதி செய்ய வேண்டும். நாய்கள் நமது உயிரினக் குடும்பத்தின் ஒரு பகுதி. தெரு நாய்களை அழிக்காமல், கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மூலம் பாதுகாப்போம். மனிதநேயத்துடன் இந்த உயிரினத்தைக் காப்போம்.
