உசிலம்பட்டி காவலர் திரு.முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம் அருகே தமிழக காவல் துறை என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. இந்த ரவுடி கும்பல் மக்களுக்கு பாதுகாப்பு தரும் காவலரையே எரித்தும், மற்றொரு காவலரை சுட்டு கொலையும் செய்துள்ளார்கள். தமிழக காவல் துறை இதுபோன்று சிறந்த முறையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் தான், குற்ற வழக்குகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. மேலும் நேற்று (28.03.2025) அறிக்கையில் தேமுதிக சார்பாக காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனையும் என்கவுண்டர் செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தோம். செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டவர்களை என்கவுண்டர் செய்ததுபோல், அதே பாணியில் காவலரை அடித்துக் கொலை செய்தவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் அறிக்கையின் மூலம் கோரிக்கை வைத்திருந்தோம். எனவே அதை உடனடியாக இன்று (29.03.2025) செயல்படுத்திய தமிழக காவல்துறைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும், கேப்டன் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே, இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காத வண்ணம் தமிழக மக்களை காப்பாற்ற முடியும். எனவே சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
