சமூக நலப்பணியாளர்கள், செவிலியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டிய ஆளும் அரசு, அதற்கு மாறாக காவல்துறையின் மூலம் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. போராட்டம் என்பது ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைக்கும் உழைப்பாளிகளை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். கைது செய்வதை விட, அவர்களின் வாழ்க்கைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை உணர்ந்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும். திடீர் திடீர் கைது நடவடிக்கைகள் மூலம் போராட்டங்களை அடக்க முயல்வது ஜனநாயக விரோத செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் எனவும் தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.




