புதுச்சேரியில் செயல்படும் உலகப்புகழ் வாய்ந்த மருத்துவக் கல்வி நிறுவனமான ஜிப்மர் (Jipmer) நிறுவனத்தில் மத்திய அரசு MBBS- BAMS பாடத்திட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து, புதியதோர் கல்வி முறையை செயல்படுத்தும் திட்டம் ஆலோசனையில் இருப்பதாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு.பிரதாப் ராவ் ஜாதவ் அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எந்தவித அடிப்படை புரிதலின்றி, அறிவியல் தத்துவங்களுக்கு எதிரானதொரு நிலை கொண்ட, இந்த MIXOPATHY மருத்துவ முறையை அமல்படுத்தும் எண்ணத்தை கைவிட வேண்டும். MBBS எனப்படும் Allopathy மருத்துவ முறை, நவீன அறிவியல் தரவுகளுடன், பலதரப்பட்ட நிலை சோதனைகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறை. BAMS எனப்படும் ஆயுர்வேத மருத்துவ முறை, பாரம்பரியமாக, அனுபவம் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் இருப்பினும், நவீன அறிவியல் தரவுகள் முறைப்படி இல்லை. இவ்விரு மருத்துவ முறைகளும் அவற்றை செயல்படுத்துவதில், வெவ்வேறு விதமான வழிமுறைகளை கொண்டுள்ளன. எனவே இந்த MIXOPATHY மருத்துவ முறை செயல்படுத்தப்பட்டால் சிகிச்சை முறைகளை தெரிவு செய்வதில், நோயாளிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மேலும், கற்கும் மாணவர்களுக்கும் எள்ளளவும் உதவிடப் போவதில்லை. சீனாவிலும் MIXOPATHY பாடத்திட்ட சோதனைகள் நடைபெற்று வந்தாலும், அத்திட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை கண்டறிய முடியவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, மேற்கண்ட அறவே சாத்தியமில்லாத கல்வி முறையினை செயல்படுத்தும் சிந்தனையை தவிர்த்து, சித்தா, ஆயுர்வேதம் போன்ற நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை முழுமையாக ஆராய்ந்து, நவீன மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தி பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்டு, ஆராய்ச்சி முறைகளை மேம்படுத்தி நம் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், உலகத்தர சிகிச்சைகள் வழங்கிட இயலும் என்னும் நிலையை எட்டும் வண்ணம், பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீனப்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
