சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என்று பல்வேறு கட்ட விலை உயர்வுகள், அது மட்டுமல்லாமல் சாலை வரி (Road Tax) ஜிஎஸ்டி (GST) என பலவிதமான வரிகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், மக்கள் வருமானத்துக்கு வழி இல்லாமல் வரிகள் மட்டும் செலுத்தும் நிலையுள்ளது. எனவே விலைவாசி உயர்வை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் சென்னையில் சொத்து வரி உயர்வு என்பது கண்டிக்கத்தக்கது, திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. சாலை வசதி, வேலை வாய்ப்பு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசு, சொத்து வரியை உயர்த்துவதால் மக்களின் எதிர்ப்பை தான் பெற முடியுமே தவிர, உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வு எந்த வகையிலும் பயன் அளிக்காது. எனவே உயர்த்த இருக்கும் சொத்து வரியை பரிசீலனை செய்து திமுக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
