சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததை வலியுறுத்தி இன்றைக்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் நலன் காப்பதே ஒரு நல்ல அரசாக இருக்க முடியும், ஆனால் அவர்களைக் குண்டு கட்டாகப் போராட்ட களத்திலிருந்து அகற்றுவது ஏற்புடையது அல்ல. இது தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசு செய்யும் வேலையாகவே உள்ளது. எனவே ஏழைப் பங்காளர் என்று தங்களை மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, உடனடியாக தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அவர்களை அராஜக முறையில் கைது செய்வதோ, குண்டு கட்டாக அப்புறப்படுத்துவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, களத்திற்கு சென்று இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை என்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல் ஆகாமல், சாம்சங் ஊழியர்களுடைய கோரிக்கையை உடனடியாக செவி சாய்த்து தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
