இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இந்த நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் காரணமாக, விரிவாக்கம் செய்து உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 60% தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். என்எல்சி நிர்வாகம் இப்பகுதி மக்களிடம் எங்கள் நிறுவனத்தில் நிரந்தர வேலை கொடுக்கிறோம் என கூறிவிட்டு, வீடு மற்றும் நிலங்களை வாங்கியுள்ளார்கள். ஆனால் இவர்களை வேலைக்கு எடுத்து ஒப்பந்த பணியாளர்களாகவே பணிபுரிந்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் குறைந்தபட்ச ஊதியம் 50 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். வீடு நிலம் கொடுத்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். பல தொழிற்சங்கங்கள் இவர்களுக்கு உறுதுணையாக இல்லாததால், இவர்களின் கோரிக்கை கேள்விக்குறியாக உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களே தங்கள் கோரிக்கைக்காக பல கட்ட போராட்டங்கள் என்எல்சி நிறுவனம் முன் நடத்துவதால், என்எல்சி நிர்வாகம், நிர்வாகத்தின் முன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தொழிலாளர்களின் பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது, அவர்களுக்கு தீர்வு காணும் பொருட்டு உயர்மட்ட குழு ஒன்றை ஆறு மாதத்திற்குள் அமைத்து, தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்வு காண வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், என்எல்சி நிர்வாகம் உயர் நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தாமல் உடனே அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக போராடிய அந்தோணி செல்வராஜை தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமாக ஆறு மாதமாக பணி நீக்கம் செய்துள்ளதை, உடனே ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
