திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளி சூரஜ் என்பவரை, 17 வயது நான்கு சிறுவர்கள் போதையில் வடமாநிலத்தவரை அரிவாளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான காணொளி மூலம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடூர சம்பவங்கள், இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதன் விளைவாக சமீப காலங்களில் கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு சட்டம் ஒழுங்கை முழுமையாகக் கையில் எடுத்துக் கொண்டு, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தி, இத்தகைய குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அதேபோல், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழகத்தில் நிலவும் நிர்வாக அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில், தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.




