12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 41 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றாமல் வேடிக்கை பார்க்கலாமா?. திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கின்ற பணச் சலுகைகள் கிடைத்து இருக்கும். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். எனவே தீபாவளி பண்டிகை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அதுபோல், பண்டிகை முன்பணம் வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் கேட்டு வருகின்றார்கள். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை, இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். 13 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தி, காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் செய்து அதனை தீபாவளி பரிசாக அறிவிக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
