தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி.எம்.கார்த்திகா அவர்களை அதிகாலை 5.30 மணியளவில், அவர் இரவு உடையான நைட்டியில் இருந்தபோது, உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல் காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது. தேர்தல் நேரத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக, ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இத்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் என்றுகூடப் பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
“மாற்றம், மாற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, திருமதி.எம்.கார்த்திகா அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.




