தமிழக அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர் இவைகளை டிஜிட்டல் முறைப்படுத்தும் தமிழக அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இவர்கள் செய்ய வேண்டிய வேலையை எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அலட்சியப்போக்கோடு வேளாண் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தப்படுவது கண்டனத்திற்குரியது. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது இரண்டு மாணவிகளை பாம்பு மற்றும் விஷ பூச்சால் தீண்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது சம்பந்தமாக பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் சூழலில் (13.11.2024) அன்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அரசின் அலட்சிய போக்கையும், மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாததை காட்டுகிறது. இதை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே வேளாண் கல்லூரி மாணவர்களை அரசுப் பணிக்கு ஈடுபடுத்தாமல் அவர்கள் கல்வி கற்க இந்த அரசு உறுதி செய்யவேண்டும்.
