மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரண நுழைவாயிலை அகற்றும் போது தூண் சாய்ந்து மேலே விழுந்ததில் ஜேசிபி (JCB) ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி நுழைவாயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதுரை மாநகராட்சி உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதால் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. அரசின் இந்த கவனக்குறைவு மிகவும் கண்டிக்கக் கூடிய விஷயம். பிரதான சாலையில் உள்ள மிகப் பழைமையான நுழைவாயில் இடிக்கப்படுகிறது என்றால் திட்டமிடுதல், மக்களுக்கு முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அதன் பிறகு பணியைத் தொடராமல் மெத்தனப் போக்காக செயல்பட்டுள்ளது, மதுரை மாநகராட்சியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். மேலும் படுகாயம் அடைந்தவருக்கு மருத்துவச் சிகிச்சையும், நிதி உதவியும் வழங்க வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
