நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரத்தின் வளர்ச்சி என பொய்யான பிம்பத்தை உருவாக்கி தற்போது இயங்கி வருகின்ற பேருந்து நிலையத்தை 8.1/2 கிலோ மீட்டர் தொலைவில் இராசிபுரம் நகரத்திற்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையத்தில் உள்ள சுமார் 140 ஏக்கர் அளவுள்ள படையப்பா நிறுவனத்தின் நிலப்பகுதியில் இராசிபுரம் பேருந்து நிலையத்தை அமைக்க ஆளும் தி.மு.க நிர்வாகிகள் முடிவு செய்து 02.07.2024 அன்று நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து 3 நாட்களிலேயே 05.07.2024 அன்று மாலையில் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் அழைக்காமல் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். அந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான திரு.ராஜேஸ்குமார்M.P. அவர்கள் பேருந்து நிலையம் அமைப்பதற்கு யாரேனும் நிலம் தானமாக வழங்கினால் ஏற்றுக் கொள்ளலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி படையப்பா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களிடம் இருந்து 7.03 ஏக்கர் நிலம் தானமாக நகராட்சி ஆணையாளர் அவர்களின் பெயரில் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஆளும் தி.மு.க. நிர்வாகிகளின் இந்த மோசடி இராசிபுரம் நகரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேற்படி வெளிப்படை தன்மையற்ற இராசிபுரம் நகராட்சி நிர்வாகம் ஆளும் கட்சியினரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இராசிபுரத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த பட்டு, நெசவு, கைத்தறி மற்றும் விசைத்தறி. நகைத்தொழில் முற்றிலும் அழிந்துள்ளது. எனவே இராசிபுரம் ஆத்தூர், பேளுக்குறிச்சி, திருச்செங்கோடு, மல்லூர் மார்க்கத்தில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் வியாபார நுகர்வே இராசிபுரம் நகரத்தின் அடிப்படையாகும். இவர்களின் மூலம் நடக்கும் வியாபாரங்களை நம்பியே இராசிபுரத்தில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இராசிபுரம் நகரத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிராம மக்களை நம்பியே இயங்குகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் உள்ளேயே இருக்கும் உழவர் சந்தை மற்றும் வார சந்தை இருப்பதால் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மக்கள் கோரிக்கை ஏற்று வேறு இடத்திற்கு பேருந்து நிலையத்தை மாற்றமால், பழைய இடத்திலேயே பேருந்து நிலையத்தை புதுப்பித்து உடனடியாக ஆளும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும்.