திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு 4, சின்னக்கோலடி பகுதியில் வசித்து வரும் கோலடி கிராமம், சர்வே எண். 22, 23, 24 அடங்கிய சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்ச்சல் புறம்போக்கு நிலமாகும். இதில் 8.48 ஏக்கர் நிலத்தில் மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளின் பாதாளச் சாக்கடை கழிவு நீரைக் கொண்டு வந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், திருவேற்காடு நகராட்சி நிர்வாகமும் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தவுள்ள நிலத்தின் கிழக்கில் தலித் மக்கள் வசிக்கும் சின்னக்கோலடி மிக அருகிலும், திருவேற்காடு நகரத்தின் 18 வார்டுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரியும், அங்கன்வாடி மையமும், கோலடி அரசு தொடக்கப்பள்ளியும், சுமார் 1000 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் அரசு உயர்நிலைப் பள்ளியும், மற்றும் கோவில்களும், லஷ்மி நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கோலடி கிராமத்தில் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களின் எதிர்காலமும், எதிர்கால சந்ததியினரின் நலனும் பாதிக்கப்படும் நிலையுள்ளது. எனவே இத்திட்டத்தை மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படுத்தாமல், மக்களின் நலனைக் காக்க இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தைத் தமிழக அரசு வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
