மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் திரு.முத்துக்குமார் பணியாற்றி வந்தார். நாவலூர் பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் மற்றும் அவர்களின் நண்பர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தனர். இதை திரு.முத்துக்குமார் அவர்கள் தட்டிக்கேட்டு, கஞ்சா விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பலமுறை கூறி இருக்கிறார். இதனை பகையாக எடுத்துக்கொண்டு அங்கே மது அருந்திக் கொண்டிருந்த கஞ்சா வழக்கில் தொடர்புள்ள சிலருக்கும் முத்துக்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு வெளியே வந்த முத்துக்குமாரை அந்த கும்பல் துரத்தி வந்து அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடுமையாக காயமடைந்து இறந்துள்ளார். முத்துக்குமாருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுத்து நிறுத்திய போலீஸ்காரரை கொலை செய்த கும்பலுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். மேலும் கடந்த வாரம் மதுரை அவனியாபுரம் அருகில், சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸ் திரு.மலையரசன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு இந்த அரசு ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். முற்றிலுமாக தமிழ்நாட்டிலிருந்து கஞ்சா விற்பனை, கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தி உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறை செயின் கொள்ளையர்களுக்கு தண்டனை வழங்கியது போல, கடுமையான தண்டனையை வழங்கி தமிழகத்தை போதை இல்லா தமிழகம் ஆக மாற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
